search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாவட்ட கல்வித்துறை"

    கோவையில் உரிய அனுமதி இல்லாமல் இயங்கி வந்த 15 தனியார் ஆரம்ப பள்ளிகளுக்கு மாவட்ட கல்வித்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
    கோவை:

    கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் ஆரம்ப பள்ளிகளில் சில பள்ளிகள் உரிய அனுமதியின்றி இயங்கி வருவதாக கல்வித்துறை அதிகாரிகளுக்கு புகார் சென்றது.

    இதையடுத்து கோவையில் 4 கல்வி மாவட்டத்திலும் உள்ள ஆரம்ப பள்ளிகளில் வட்டார கல்வி அலுவலர்கள் ஆய்வு நடத்தினர். இதில் எஸ்.எஸ்.குளத்தில் 6, பேரூரில் 3, பொள்ளாச்சியில் 2, கோவையில் 4 என மொத்தம் 15 பள்ளிகள் உரிய அனுமதி இல்லாமல் இயங்கி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து அந்த பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு மாவட்ட கல்வித்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

    ஆரம்ப பள்ளிகள் நடத்துவதற்கு மாவட்ட கல்வித்துறையிடம் முறையான அனுமதி பெற்றிருக்க வேண்டும். குறிப்பாக பள்ளிகள் தனியார் இடத்தில் இயங்குவதாக இருந்தால் கட்டட உரிமையாளருடன் குறைந்தது 30 ஆண்டு ஒப்பந்தம் போடப்பட்டு அதற்கான ஆவணங்கள் இருக்க வேண்டும்.

    மேலும் கட்டிட அனுமதி, சுகாதாரதுறை சான்றிதழ், தீயணைப்பு துறையினரின் தடையில்லா சான்று ஆகியவை இருக்க வேண்டும். இதோடு பள்ளியில் வகுப்பறைகளுக்கு போதிய இட வசதி, கழிவறை வசதி, மைதான வசதி ஆகியவை செய்திருக்க வேண்டும்.

    15 பள்ளிகளில் இவற்றை முறையாக செய்யவில்லை என்பதை கண்டுபிடித்து, விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுத்துள்ளோம். அடுத்தக்கட்டமாக இன்னும் ஓரிரு மாதங்களில் மீண்டும் ஆய்வுகள் நடத்தி ஜனவரி மாதம் மேலும் 2 நோட்டீசுகள் வழங்கப்படும்.

    முறையான ஆவணங்கள் மற்றும் உரிய அனுமதி இல்லாத பள்ளிகள் அடுத்த கல்வி ஆண்டு முதல் இயங்க முடியாதபடி நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர். #tamilnews
    ×